தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ‘ராய்’ என்கிற அதிக சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டிருக்கிறது.
மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளி காற்று சூழன்றடித்தது. இதனால் சமீபத்திய ஆண்டுகளில் பிலிப்பைன்சை தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த புயலாக இது கருதப்படுகிறது. 2 நாட்களாக வீசிய புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
மின் கம்பங்களும் சரிந்து அறுந்துள்ளன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் அனைத்தும காற்றில் அடித்து செல்லப்பட்டன.
புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அதேபோல் புயல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின. இந்நிலையில் ‘ராய்’ புயல் காரணமாக தற்போது 208 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், 52 பேர் மாயமாகி உள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.