உலக மக்கள் அனைவருக்குமே புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி கேக் வெட்டி பார்ட்டி வைத்து புதிய ஆண்டை வரவேற்பார்கள். துரதிருஷ்டவசமாக கடந்த 2 ஆண்டுகளாக அதற்கு தடை போட்டு வைத்திருக்கிறது கொரோனா. சரி இந்தாண்டாவது கொண்டாடுவோம் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஒமைக்ரான் பேரிடியாக இறங்கியுள்ளது. ஒமைக்ரான் பரவல் ஜனவரியில் தான் உச்சமடையும் என்பதால் இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படலாம்.
இச்சூழலில் இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால் இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மெரினா கடற்கரையில் வருகிற 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டுவது வழக்கம். புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆகவே, நட்சத்திர ஹோட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தடையை மீறி புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எங்காவது நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக் கொள்வதோடு, ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் ஓட்டல் உரிமையாளர்களும், பண்ணை வீடு அதிபர்களும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.