கோவை என்றால் ஈஷா யோகா மையம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்தளவிற்கு கோவை மாவட்டத்தின் அடையாளமாக தாங்கி நிற்கிறது ஈஷா யோகா மையம். சத்குரு ஜகி வாசுதேவின் தீவிர முயற்சியினால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டது. இங்கு 112 அடி உயரமும் 500 டன் எடையும் கொண்ட ஆதியோகி (சிவன்) சிலை நிறுவப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் இச்சிலை சர்வதேச அளவில் புகழ்பெற்று பல்வேறு நாட்டு மக்களையும் கவர்ந்திழுத்தது.
உலகப் புகழ்பெற்ற ஈஷா யோகா மையத்திற்கு பன்னாட்டு மக்கள் வருகை தருகின்றனர். ஒருசிலர் அங்கேயே தங்கி யோகா, ஆன்மிகத்தைக் கற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு புகழ்பெற்று திகழ்ந்த ஈஷா மையத்திற்கு சோதனையும் வந்தது. அது நில ஆக்கிரமிப்பு என்ற வடிவில் வந்தது. அதாவது கோவையையொட்டிய வனப்பகுதியை ஆக்கிரமித்து ஈஷா மையம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல வனத்தின் பாதுகாவலன் எனச் சொல்லப்படும் யானைகளின் வழித்தடத்தை மறித்து ஆதியோகி சிலை நிறுவப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதில் துளியும் உண்மையில்லை என சத்குரு ஜகி வாசுதேவ் மறுத்துவந்தார். முழு ஆதாரமும் தங்களிடம் இருப்பதாகவும், வனத்தை ஆக்கிரமிக்கவில்லை என தீர்க்கமாகக் கூறினார். சட்ட ரீதியாக எதையும் சந்திப்போம் எனவும் தெரிவித்தார். அவர் சொன்னபடியே இன்று நிரூபணமாகியுள்ளது. ஆம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதில்களே அதற்கு முழுமுதற் சாட்சி. குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிய ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட வன அலுவலகத்திடம் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
அதற்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வன அலுவலகம் அளித்துள்ள பதில்களில் இல்லை என்ற சொல்லே அதிகமாக இருக்கிறது. அதாவது ஆக்கிரமிக்கவே இல்லை என அறுதியிட்டு சொல்லியுள்ளது. அதில், “வனப்பகுதியில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. அதேபோல வனத்தில் ஈஷாவின் கட்டடங்கள் எதுவும் கட்டப்படவில்லை. கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பது இல்லை. ஆகவே ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தை இடைமறித்து கட்டப்பட்டதாக சொல்ல முடியாது.
யானை வழித்தடங்கள் எதுவும் ஈஷா யோகா மையம் அருகில் இல்லை. யானைகளின் வாழ்விடங்களையும் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நீண்ட நாளைய சர்ச்சைகளுக்கு அரசின் தீர்க்கமான பதில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன், இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, நில அபகரிப்பு புகார், வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு என்கிற புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டதாக ஒரு தகவல் பரப்பப்பட்டது. அது உண்மையில்லை என அமைச்சர் பின்பு விளக்கமளித்தார். அதேபோல ஆக்கிரமிப்பிலும் உண்மை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.