தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பல மாதங்கள் பொது முடக்கத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னரே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதற்குள்ளாக புதிய வகை ஓமிக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 33 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கெனவே அமலில் உள்ள ஊடரங்கு வரும் 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் ஜெயந்த், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் ஓமைக்ராச் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாலும், பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிகளவில் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருவதாலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.