தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாதி வேறுபாடின்றி, பொது மையானங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளகுறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்து வருகின்றனர். இதனால் இந்த புறம்போக்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மயானம் அமைக்க வேறு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது , அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, இதுபோன்ற வழக்கு தொடர்வது வேதனை அளிக்கிறது. சாதிப்பாகுபாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒற்றுமை இல்லாமல் ஆகிவிட்டது . காலம் காலமாக எஸ்.சி , அருந்ததியர் உள்ளிட்ட சாதியினருக்கு உடலை அடக்கம் செய்ய சொந்த நிலம் இல்லை. இவர்கள் இறந்தால் உயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலம் வழியாக உடலை கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை இருக்கிறது என்றார்.
மேலும் , இந்த வழக்கிலும் அருந்ததியினருக்கு மயானம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாற வேண்டும் என்றும், தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகள் தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானத்தை உருவாக்க வேண்டும் என்றும், எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து சாதியினரும் பொது மையானங்களை பயன்படுத்த உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார். மீறி செயல்படும் அவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார்.
பொது மையானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கத் தொகையை வழங்கி அதன் மூலம் இதுபோன்ற மையான முறையை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் மனுதாரரின் மடூர் கிராமத்தில் சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானத்தை அமைக்க உரிய இடத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.