பிரதமர் மோடி, சோனியா பீகாரில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக வெளியான பட்டியல் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பீகார் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பாட்னா:
பீகாரில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக போலி பட்டியல்கள் அடிக்கடி வெளியாவதாக புகார்கள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றும் ஒரு போலி பட்டியல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த தடுப்பூசி பட்டியலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா, உள்துறை மந்திரி அமித்ஷா, பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதை கண்டதும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மோடி, சோனியா பீகாரில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக வெளியான பட்டியல் சமூக வலை தளங்களில் நேற்று வைரலாக பரவியது. இதையடுத்து பீகார் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அர்வால் மாவட்டத்தில் உள்ள கர்பி போலீஸ் எல்லைக் குட்பட்ட பகுதியில் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. 2 தவணை தடுப்பூசியும் அவர் செலுத்திக் கொண்டதாக படத்துடன் தகவல் இடம்பெற்றுள்ளது.
மோடியின் படமும், பெயரும் அந்த சுகாதார மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் எப்படி சேர்ந்தது என்பது பற்றி புள்ளிவிவர ஆபரேட்டர்கள் பிரவீன்குமார், வினய்குமார் ஆகிய 2பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் இதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து பீகார் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சஸ்பெண்டு செய்யப்பட்ட 2 பேரும் உள்ளூர் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘எங்களது மேனேஜர் இந்த பெயர்களை சேர்க்கும்படி கூறினார். அதன் பேரில்தான் நாங்கள் அந்த பணிகளை செய்தோம்’’ என்றனர்.
இதையடுத்து கூடுதல் விசாரணைக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.