பிரிட்டனில் சில வாரங்களுக்குள் டெல்டா வகை கொரோனா படிப்படியாக வெளியேறும் என்றும், ஒமைக்ரான் விரைவாக ஆதிக்கம் செலுத்தும் என்றும் தொற்று நோய் நிபுணர் பேராசிரியர் பால் ஹன்டர் தெரிவித்துள்ளார்.
லண்டன்:
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துவிட்டது. இதனால் ஆபத்தான நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டனில் ஒமைக்ரான் வைரசால் நேற்று மேலும் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 336-ஆக உயர்ந்து உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் இங்கிலாந்தில் 64 பேரும், ஸ்காட்லாந்தில் 23 பேரும், வேல்ஸில் 3 பேரும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான பேராசிரியர் பால் ஹன்டர் கூறுகையில், ” பிரிட்டனில் சில வாரங்களுக்குள் டெல்டா வகை கொரோனா படிப்படியாக வெளியேறும், ஒமைக்ரான் விரைவாக ஆதிக்கம் செலுத்தும்.
மேலும், பிரிட்டனில் நேற்று கொரோனாவால் புதிதாக 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10.50 லட்சத்தை தாண்டியுள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை 1,45,646 ஆக உள்ளது ” என்றார்.