கொரோனா சிகிச்சையிலிருந்து நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பியதும், தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிக்பாஸ் படப்பிடிப்பில் பங்கேற்றது சர்ச்சையானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனிடம் எந்த விளக்கமும் கேட்கத் தேவையில்லை என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் அண்மையில் அமெரிக்கா சென்றிந்தார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு நவம்பர் 22 அன்று கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தார் கமல்ஹாசன். இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கமல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர் இடத்தில் படிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் தொகுத்து வழங்கினார். இதற்கிடையே கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கமல்ஹாசன், நவம்பர் 4-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
அதன் தொடர்ச்சியாக சென்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதனையடுத்து வீடு திரும்பியதும், கமல்ஹாசன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிக்பாஸ் படப்பிடிப்பில் பங்கேற்றது சர்ச்சையானது. பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து வீடு திரும்பியவர்கள், ஒரு வாரம் வரை வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், கமல் உடனே படப்பிடிப்பில் பங்கேற்றது சர்ச்சையான நிலையில் இதுபற்றி தமிழக சுகாதார செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், ‘கமலிடம் விளக்கம் கேட்கப்படும்’ என்று கூறியதாக செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். அவர் மேலும் விளக்கமும் அளித்துள்ளார். “ நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர். அதனால், அவருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் அவருக்கு மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அவர் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், அதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.” என்று விளக்கம் அளித்துள்ளார்.