இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் 949 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. நம் நாட்டில் ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பயம் காரணமாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் எச்.டி.எப்.சி. மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்ளிட்ட 30 நிறுவன பங்குகளின் விலையும் சரிவு கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,421 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,002 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 175 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.256.75 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.34 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
குறியீட்டு எண் சென்செக்ஸ் 949.42 புள்ளிகள் குறைந்து 56,747.14 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 284.45 புள்ளிகள் சரிவு கண்டு 16,912.25 புள்ளிகளில் முடிவுற்றது.