சித்தாபூர்
சித்தாபூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தாப்பூரில் காப்பிக் கொட்டை, ஏலக்காய், மிளகு மற்றும் அன்னாசி பழம் ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன. அதனுடைய இயற்கை அழகுக்காக பெரிதும் அறியப்படும் சித்தாபூர், கடல் மட்டத்திலிருந்து 1850 அடி உயரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது. சித்தாபூரின் தோட்டங்களுக்கு இடையே நடை பயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.
சித்தாபூர் நகரின் கவர்ச்சி அம்சங்களில் முக்கியமானது புருடே நீர்வீழ்ச்சி. இது சித்தாபூர்-கும்தா சாலையில் அமைந்திருக்கிறது. இது தவிர இந்தப் பகுதி நிறைய கோயில்களுக்கும் பிரபலமானது. இங்குள்ள லக்ஷ்மி நாராயண கோயில், கொண்டி மாரிக்கம்பா கோயில் மற்றும் பங்கேஷ்வரா கோயில் ஆகியவை புனித யாத்ரிகர்கள் பலருக்கு புண்ணிய ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. சித்தாபூரை போலவே இயற்கை எழில் கொஞ்சும் அழகழகான கிராமங்கள் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில இருக்கின்றன. அவற்றில் அம்மதி என்ற கிராமமும் பெரும்பாலும் காப்பிக் கொட்டை மற்றும் ஏலக்காய் பயிரிடுவதையே தொழிலாக கொண்டுள்ளது.
சித்தாபூரில் நடைபெறும் கொடவா என்று அழைக்கப்படும் ஹாக்கி திருவிழாவை காண வருடந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வர். பொல்லிபெட்டா என்ற புத்த விகாரமும், கோட்டையும் சித்தாபூர் அருகில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்கள் ஆகும். சித்தாபூருக்கு அதனுடைய குளிர்ச்சியான வெப்ப நிலைக்காக கோடை காலத்தில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும். மேலும், அக்டோபரிலிருந்து ஜனவரி வரைக்குமான காலமும் சித்தாபூரை சுற்றிப் பார்க்க உகந்த காலங்களாகும். பெங்களூர் விமான நிலையம் சித்தாபூருக்கு அருகாமையில் உள்ளது. அதே சமயம் ரயில் பயணிகள் மைசூர் வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் சித்தாபூரை அடையலாம்.
கெம்மனகுண்டி
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த காடுகள், பசுமையான பச்சை புல்வெளிகள் யாவற்றையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.
கெம்மனகுண்டி நகரம்
ஒரு காலத்தில் கிருஷ்ணராஜ வடியார் மன்னருக்கு கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தது. அதன் காரணமாகவே இதற்கு கே.ஆர் குன்று என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் கெம்மனகுண்டியில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் உருவாக்க்கப்பட்டு அந்த நகரமே ஆடம்பரமான உல்லாச நகரமாக காட்சியளித்தது.
அதன் பின்னர் கிருஷ்ணராஜ வடியார், கெம்மனகுண்டியை கர்நாடக அரசுக்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்போது இந்த நகரம் கர்நாடக தோட்டக்கலை துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கெம்மனகுண்டி நகரம் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை அனைத்தையும் நீங்கள் ஒரே நாளில் காண்பதென்பது முடியாத காரியம். செங்குத்தான குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இசட் முனையை அடைய 30 நிமிடங்கள் ஆகும். இதன் உச்சியிலிருந்து கெம்மனகுண்டி நகரை சுற்றியுள்ள பகுதிகளின் அழகிய காட்சிகளை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.
ஹெப்பே அருவி, காலஹஸ்தி மற்றும் கல்லதிகிரி என்ற பெயர்களில் அறியப்படும் கல்ஹட்டி நீர்வீழ்ச்சி போன்றவை கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.
அதோடு விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்றும் இங்கு உள்ளது. முல்லயநாகிரி மற்றும் பத்ரா புலிகள் பாதுகாப்பு காடுகள் ஆகியவையும் கெம்மனகுண்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.
மரவந்தே
மரவந்தே நகரம் தனது வலது புறத்தில் அரபிக்கடலையும், இடது புறத்தில் சௌபர்ணிகா நதியையும் கொண்டு, அதன் நடுவே ஒரு சொர்க்க பூமியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இது கர்நாடகாவின் தெற்கு கன்னரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மரவந்தேவின் கடற்கரையில் மனிதனின் கால்தடம் படாமல் பல மைல்கல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பின் புனிதத் தன்மையை குறிக்கும் விதமாக இதற்கு கன்னிக் கடற்கரை என்று பெயர் வந்தது.
மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான இது கொல்லூருக்கும், கொடச்சத்ரி குன்றுக்கும் அருகில் உள்ளது. கன்னிக் கடற்கரையின் கரையோரத்தில் ஓங்கி வளர்ந்து நிற்கும் பனை மரங்களும், எல்லையில்லாமல் பரந்துக் கிடக்கும் மணற்பரப்பும், ஆரவாரமில்லாமல் காணப்படும் சமுத்திரமும் உங்கள் மனதை சாந்தப் படுத்தி சுற்றுலா வந்த அனுபவத்தை இன்பமயமாக ஆக்கும். கடற்கரை நகரமான மரவந்தேவின் கடலில் நீச்சல் அடிப்பது மற்றும் ‘ஸ்கூபா டைவிங்’ என்று அழைக்கப் படும் கடலின் அடி ஆழம் வரை சென்று வருவது போன்ற போழுபோக்குகளில் பயணிகள் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள்.
அதே போல் நீங்கள் சௌபர்ணிகா நதியில் படகு சவாரி செல்லலாம். அந்த நதியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டது என்று சொல்லப்படுகிறது. மரவந்தேவுக்கு அருகில் உள்ள கொல்லூர் என்ற சிறு நகரத்தில் பயணிகள் மனம் கவரும் வகையில் பல சுற்றுலா மையங்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோயில், குந்தபுரா, கஞ்சுகோடு, பெலக்கா தீர்த்த அருவி மற்றும் சூரிய அஸ்த்தமனத்துக்காக பேர்போன பைந்தூர் கிராமம் ஆகியவை கொல்லூரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தான் அமைந்திருக்கிறது. அதே போன்று கொடச்சத்ரி குன்று சாகசப் பிரியர்களின் சிறந்த தேர்வாக இருக்கும்.