நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது மோன் மாவட்டம். இது அண்டை நாடான மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் சில பகுதிகளுக்குள் பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாகவும், சதி திட்டம் தீட்டவிருப்பதாகவும் அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவ்வாறு தேடிக் கொண்டிருக்கும்போது 13 பேரை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை ஆய்வுசெய்த போது தான் அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல; பொதுமக்கள் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த கூலித் தொழிலாளர்கள் என்பதும், வாரத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவ்வாறு ஊருக்குச் செல்ல அம்மக்கள் காத்திருந்தபோது தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். அவர்களின் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். தாக்குதலில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மோன் மாவட்டம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ, “இச்சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். நீதி கிடைக்கும். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.