கொரோனாவில் இருந்து குணமான நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கிட்டதட்ட 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போதுள்ள 13 போட்டியாளர்களில் இந்த வார கேப்டனான நிரூப், புதிய வைல்ட்கார்ட் என்ட்ரிகளான அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய மூன்று பேர் தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்களில் யார் வெளியேற போகிறார் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் ஹவுஸ் ஆஃப் கதர் துவக்க விழாவிற்காக சிகாகோ சென்று வந்த கமலுக்கு நவம்பர் 22 ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனால் கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் கடந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கமலும் மருத்துவமனையில் இருந்து வீடியோ கால் மூலம் பேசினார்.இந்நிலையில் கமல் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமாகி விட்டார்.
டிசம்பர் 3 ஆம் தேதி வரை தனிமையில் இருக்க அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 முதல் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வார சனிக்கிழமை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்க கமல் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது.
ஆனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்படும் ஷோவிற்கான ஷுட்டிங் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலேயே நடத்தப்பட்டு விடும். கமலின் தனிமைப்படுத்துதல் காலம் நாளையுடன் தான் முடிகிறது. அதனால் இந்த வார ஷோவையும் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
மேலும் அடுத்த வாரத்தின் சனிக்கிழமை எபிசோடின் துவக்கத்தில் கமல், ரம்யா கிருஷ்ணன் இருவரும் இணைந்து வர உள்ளதாகவும், கமலுடன் பேசிய பிறகு ரம்யா கிருஷ்ணன் புறப்பட்டு செல்ல உள்ளதாகவும், அதன் பிறகு கமல் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.