இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 620 புள்ளிகள் உயர்ந்தது.
ஒமைக்ரான் வைரஸ் வகையின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை, அக்டோபரில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி அதிகரிப்பு, கடந்த செப்டம்பர் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,910 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,347 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 135 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.37 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.27 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 619.92 புள்ளிகள் உயர்ந்து 57,684.79 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 183.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,166.90 புள்ளிகளில் முடிவுற்றது.