தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது –
வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவான பின்னர் 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், குமரிக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டிசம்பர் 1ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.