கடைசி நிமிடங்களில் கைகொடுக்காத சுழற்பந்துவீச்சு… இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் டிரா

by Column Editor

நியூசிலாந்து அணி 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்ததையடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

கான்பூர்:

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது டிக்ளேர் செய்தது. இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டத்தின்போது, 279 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இன்று களம் இறங்கினர். இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.

ஆனால், மதிய உணவு இடைவேளை வரை முதல் செசனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அஸ்வின், அக்சார் பட்டேல், உமேஷய் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் மாறிமாறி ஓவர்கள் வீசியும் பலன் அளிக்கவில்லை.

நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை 35 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பத் தொடங்கியது. சோமர்வில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த டாம் லாதம் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

கேப்டன் வில்லியம்சன் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பின்வரிசை வீரர்களும் விரைவில் ஆட்டமிழந்தனர். 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், கடைசி விக்கெட் ஜோடியான அஜாஸ் பட்டேல், ரச்சின் ரவீந்திரா இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்றனர். அவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி டிராவில் முடிந்தது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் ரச்சின் ரவீந்திரா. நீண்ட நேரம் களத்தில் நின்ற இவர் 91 பந்துகள் தாக்குப்பிடித்து ஆடினார்.

Related Posts

Leave a Comment