கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் என மொத்தம் 11 வகையான சத்துகள், கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவைப்படுகின்றன. எனவே அது மாதிரியான சத்து வகைகளை கர்ப்பிணிகள் உணவாக கொள்ளவேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து கிடைக்க தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வாரம் ஒரு முறை வெல்லம் கலந்த உணவு சாப்பிட்டால் நல்லது. அவ்வப்போது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் சுண்டைக்காய், பாகற்காய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் மூலம் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும். கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாமல் காபி, டீ போன்றவை தடுத்து விடுகின்றன. அதே நேரத்தில் டீ, காபிக்கு பதிலாக கர்ப்பிணிகள் பால் குடிப்பது மிகவும் நல்லது.
பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவற்றில் இருந்து புரதச்சத்து கிடைக்கும். பச்சை காய்கறிகளை சமைக்கும் போது அவற்றில் போலிக் அமில சத்து வெளியேறி விடுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். உங்கள் வீட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த 11 வகையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம் தானே!