வீட்டு தோட்டத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் வைப்பது மிகவும் கடினமான செயலாகும். ஒவ்வொரு வீட்டையும் முன்னே வரவேற்பது தோட்டம் தான். உடலுக்கு முகம் எவ்வளவு முக்கியமோ அது போன்று வீட்டிற்கு தோட்டம் முக்கியம். நமக்கு மனது ஏதேனும் குழப்பமாக இருந்தாலோ அல்லது வேதனையாக இருந்தாலோ தோட்டத்தில் அமர்ந்து யோசிக்கலாம். தோட்டத்தில் இருந்தால் மன அமைதி கிடைக்கும் . அத்தகைய தோட்டத்தை பராமரிப்பதென்பது இயல்பான செயல் இல்லை. அதற்கு பல கலைகளை பயன்படுத்த வேண்டும்.
கால நிலைக்கு ஏற்ப தோட்டத்தை பராமரிப்பதுடன், களைகள் மற்றும் விலங்கினங்களிடமிருந்தும் அவற்றை பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். குழந்தைகளை பேணி வளர்ப்பதை போல் தோட்டத்தையும் காக்க வேண்டும். அதன் தன்மை அறிந்து நீர் பாய்ச்ச வேண்டும். அதனுடன் நம் உறவை பலப்படுத்திக் கொண்டால், நல்ல பசுமையான தோட்டத்தை பெற முடியும். இங்கு தோட்டத்தை பராமரிக்கும் சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கருவிகள்
பொருத்தமான கருவிகளை தேர்வு செய்ய வேண்டும். முதல் விஷயமாக தோட்டத்தை பராமரிக்க உதவும் கடப்பாறை, கலகொத்தி போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
தண்ணீர் பாய்ச்சல்
தண்ணீர் ஆவியாகி போவதை தடுக்க காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் விடவும். வேண்டுமெனில் இரவு நேரங்களில் விடலாம்.
உரம்
பசுமை தன்மையை அதிகரிக்க, மண் தன்மைக்கு ஏற்ற உரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
வைக்கோல்
நில அரிப்பை தடுப்பதற்காகவும், வேரின் ஈரத்தை காப்பதற்காகவும் வைக்கோல் வைக்கவும். இதனால் ஈரப்பதத்தை வேர்களுக்கு தருவதுடன் தேவையில்லாத களைகளால் உருவாகும் காளான்களை தடுக்க முடியும்.
பருவத்திற்கேற்ற செடிகள்
பருவத்திற்கேற்ற செடிகளை நடுவது மிகவும் லாபம் தரக் கூடிய ஒன்று. சரியான நேரத்தில் செடிகளை வைத்து பசுமையை பெற முடியும்.
களையெடுத்தல்
களையெடுத்தல் என்பது தோட்டக்கலையில் முக்கியமான ஒன்றாகும். எப்பொழுதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றதோ, உடனே தோட்டத்தில் உள்ள தேவையில்லாத களைகளை நீக்குவதில் கவனம் கொள்ள வேண்டும்.
பசுமை புதர்கள்
பசுமை புதர்களை அமைத்தல் என்பது, எந்த ஒரு பருவத்திலும் நம் தோட்டத்திற்கு பசுமையை கொடுக்க கூடிய சிறந்த கலையாகும்.
புது பயிர்
அறுவடை முடிந்த உடனே புது பயிர்களை நடுதல் அவசியம். இதனால் களைகள் தோன்றுவதை தடுப்பதுடன் தோட்டத்தை முழுமையான அழகுடன் காணவும் வழி செய்கின்றது.
அதிக தண்ணீர்
செடிகளுக்கு தண்ணீர் தேவை தான். ஆனால் அதற்காக அதிக அளவில் தண்ணீர் வேண்டாம். அவை செடியை பாதிக்கக்கூடும்.
இயற்கை உரம்
விலங்குகளிலிருந்தும், செடிகளிலிருந்தும் இயற்கை உரத்தைப் பெற முடியும். மேலும் இவற்றை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால், நிலத்தின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும்
அதிகம் வெட்ட வேண்டாம்
சில வகை செடிகளை அதிகமாக வெட்டத் தேவையில்லை. அவற்றை ஒன்றிரண்டு முறை வெட்டினால் போதுமானது.
நிலத்தின் தன்மை
நிலத்தின் தன்மையை கண்டுபிடிப்பதன் மூலம் எத்தனை முறை நீர் பாய்ச்ச வேண்டும் என்பதையும் ஆராய முடியும்.