பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பழனி மலையில் 18 சித்தர்களில் ஒருவரான போகரால் நவபாஷாணத்தை கொண்டு செய்யப்பட்ட முருகன் சிலை கோவில் மூலவராக உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில் முருகன் ஆண்டி கோலத்தில் காட்சியளிக்கிறார். பழனி மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வர ரோப்கார், வின்ச் ஆகிய வசதிகள் உள்ளன. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் வின்ச் சேவை ராக்கால பூஜை வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருவமழை காரணமாக அதிக அளவில் மழை பெய்து வருவதால் ரோப்கார் சேவை அடிக்கடி தடைபடுகிறது.
இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரோப் கார் இயங்காது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் மின் இழுவை ரயிலை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அதிக அளவில் மின் இழுவை ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் மூன்றாவது வின்ச் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.