ஓமைக்ரான் என்ற வார்த்தை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் அதுவும் ஒரு வகை கொரோனா தான். கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் தான் இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸூக்கு ஓமைக்ரான் என நேற்று தான் உலக சுகாதார மையம் பெயர் வைத்தது. அதேபோல இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள், அஜாக்கிரதையாக இருக்காமல் அவர்களும் தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளது.
இதில் 50 வகையான மரபணு மாற்றங்கள் காணப்படுகிறது. இதுதடுப்பூசியின் வீரியத்தை 40 சதவீதம் வரை குறைக்கும் தன்மை கொண்டிருப்பதாக சொல்லப்படுவதே உலக நாடுகளின் அச்சத்திற்குக் காரணம். ஓமைக்ரானை தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்று கேட்டதற்கு பைசர், பயோ என்டெக் தடுப்பூசி நிறுவனங்கள் கையை விரித்துவிட்டன. இதன் காரணமாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான விமான சேவைகளை ரத்துசெய்துள்ளன.
ஐரோப்ப நாடுகள், அமெரிக்கா போன்றவை கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலித்து வருகின்றன. இந்த வைரஸ் இந்தியாவில் பரவவில்லை என நேற்றே சுகாதார அமைச்சகம் தெளிவுப்படுத்திவிட்டது. இச்சூழலில் மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ள சுகாதார அமைச்சக செயலர் ராஜேஷ் பூஷன், “இந்தியாவில் விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே தென் ஆப்பிரிக்க வகை வைரஸ் பரவல் காணப்படும் நாடுகளிலிருந்து வருவோரை மிக தீவிரமாக பரிசோதிக்க வேண்டும். அவர்களின் முகவரி குறித்த முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.