டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே இந்தியா வெளியேறிவிட்டது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காயத்திற்கு மருந்து போடும் விதமாக இந்தியாவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்தது. தற்போது அடுத்த வதத்திற்காக இந்தியா காத்திருக்கிறது. ஆம் நாளை மறுநாள் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. ரஹானே வழிநடத்துகிறார்.
டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஷமி, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஷ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பரத், ஜெயந்த் யாதவ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுல் மீதான கவனம் அதிகரித்தது. அவருடன் யார் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. மயங்க் அகர்வாலா, சுப்ம்ன கில்லா என்று விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் தற்போது ராகுலே களமிறங்க மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடைசி டி20 போட்டியிலேயே ராகுல் விளையாடவில்லை. அது இளம் வீரருக்கான வாய்ப்பு கொடுப்பதற்காக ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் காயத்தின் காரணமாகவே அவர் விளையாடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து ராகுல் விலகுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படுகிறார்.