கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அனைத்து வகை பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன. சரக்கு சேவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. முதல் அலை ஓய்ந்த பின் ரயில் சேவை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. பயணிகள் ரயில்களான எக்ஸ்பிரஸ், மெயில், விடுமுறை மற்றும் பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் என அனைத்துமே சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. இதையடுத்து தளர்வுகளுக்கேற்ப ரயில் சேவை படிபடியாக உயர்த்தப்பட்டது.
இதில் மெயில், எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களில் வழக்கமாக வசூலிக்கப்படும் சாதாரண கட்டணமே வசூலிக்கப்பட்டது. ஆனால் பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் தட்கல் டிக்கெட்டுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சாதாரண டிக்கெட்டை விட இதில் கட்டணம் அதிகம். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் பழைய நடைமுறையில் அனைத்து வகை ரயில்களையும் இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான வேலை கடந்த வாரம் 14ஆம் தேதியே தொடங்கிவிட்டது.
சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டதால் ரயில்களின் நம்பரும் மாற்றப்பட்டது. இதனை பழைய நம்பருக்கு மாற்றியுள்ளனர். இதற்காக நவ.14 முதல் 21ஆம் தேதி வரை இரவில் மட்டும் 6 மணி நேரம் ரயில்களுக்கு முன்பதிவு, கரண்ட் புக்கிங், டிக்கெட் கேன்சல் போன்ற சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்துவிட்டதால் புதிதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாற்றப்பட்டு, சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.இனி அதில் தட்கல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால் அந்த ரயில்களில் சாதாரண கட்டணம் செலுத்தி பயணிக்க முடியும். அதன்படி தெற்கு ரெயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில் 39 விடுமுறை கால மற்றும் பண்டிகை கால சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணம், தட்கல் கட்டணத்திலிருந்து, வழக்கமான கட்டணமாக மாற்றப்பட்டு உள்ளது. அவற்றின் நம்பர்களும் மாற்றப்பட்டுள்ளன. இதேபோல வேறு வேறு மண்டலங்களிலும் பழைய நடைமுறைக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.