விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற எஃப்-35 விமானம், நேற்று முன் தினம் (புதன்கிழமை) விபரம் வெளியிட முடியாத ஒரு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தைச் செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து, விமானம் தாங்கிக் கப்பலுக்கு பாதுகாப்பாகத் திரும்பினார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ரேடாரின் கண்களுக்குப் புலப்படாமல் இரகசியமாகப் பறக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இரகசியங்களைக் கொண்ட அந்த விமானம் ரஷ்யாவிடம் சிக்குவதற்கு முன்னர் அதனைக் கண்டறிந்து மீட்க படை வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
கடலுக்குள் விழுந்துள்ள அந்த வகை விமானத்தில், எதிரிகளின் வான் எல்லைப் பகுதிக்குள் விமானம் பறப்பதை இரகசியமாக வைத்திருக்கும் ராடார் உள்ளது. மேலும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இராணுவத் தொழில்நுட்பங்களை அந்த விமானம் கொண்டுள்ளது.
அந்த விமானத்தை ரஷ்யா கைப்பற்றினால், அதனைக் கொண்டு பல இரகசிய ராணுவத் தொழில்நுட்பங்களை அந்த நாடு அறிந்துகொள்ளும் இது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அனுகூலத்தை ரஷ்யாவுக்கு ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
எதிரிகளின் எல்லைக்குள் இரகசியமாக ஊடுருவும் திறனுடன், உளவுத் தகவல்களைத் திரட்டவும், தாக்குதல் விபரங்களை துல்லியமாக படமெடுத்து அனுப்புதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் எஃப்-35 ரக விமானங்கள் பயன்படுகின்றன.
ஒற்றை-எஞ்சின், ஷார்ட்-டேக்-ஒஃப் செங்குத்தாக தரையிறங்கும் எஃப்-35 ரக விமானம் ஒன்றை தயாரிக்க 115 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.
அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த அதிநவீன விமானங்கள், ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.