கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் அனைத்து வகை பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன. சரக்கு சேவை ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. முதல் அலை ஓய்ந்த பின் ரயில் சேவை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டது. இதையடுத்து தளர்வுகளுக்கேற்ப ரயில் சேவை படிபடியாக உயர்த்தப்பட்டது. குறிப்பாக கவுண்டர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை. ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசியில் முன்பதிவு மட்டுமே நடைமுறையில் இருந்தது.
தற்போது கொரோனா பரவல் முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால் பழைய நடைமுறைப்படி ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மீண்டும் பயண அட்டவணையைத் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பழைய ரயில்கள் பயணிகள் மெமோ ரயில்களாகவும், எக்ஸ்பிரஸ்களாகவும் மாற்றப்பட உள்ளன. இது கொஞ்சம் சவலான வேலை. ஆகவே இரவு நேரத்தில் குறைந்தபட்சமாக ரயில் டிக்கெட் சேவைகளை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி நவம்பர் 14ஆம் தேதி (நேற்று) முதல் நவம்பர் 21ஆம் தேதிவரை இரவில் மட்டும் 6 மணி நேரம் ரயில்களுக்கு முன்பதிவு, கரண்ட் புக்கிங், டிக்கெட் கேன்சல் போன்ற சேவைகள் நிறுத்திவைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது இரவு 11.30 மணியிலிருந்து அதிகாலை 5.30 மணி வரை ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாது. மற்ற சேவைகள் நிறுத்தப்பட்டாலும் புகார் தெரிவிப்பதில் எந்த தடையும் இல்லை. அதேபோல ரயில்வே புகார் எண் 139 வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.