முன்பெல்லாம் திருமண நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்படும் போட்டோக்களை வைத்துதான் திருமண பத்திரிக்கையை அச்சடிப்பார்கள். கட்டவுட் மற்றும் பேனர்கள் அமைப்பார்கள். ஆனால் இப்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் போட்டோ ஷூட் என்று தனியாக நடத்தி அந்த புகைப்படங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலானோர் கடல், அருவி, விமானம் என்று வித்தியாசமாக யோசித்து சினிமா போல் அங்கெல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்துவது போல் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். இப்படித்தான் பெருக்கெடுத்து ஓடும் நதியில் டைட்டானிக் போஸ் கொடுத்து போட்டோ எடுக்க முற்பட்ட போது மணமகன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் நடந்த போட்டோஷூட்டில் வருங்கால கணவர் சில்மிஷம் செய்ததால் அதை கண்டித்து மணப்பெண் கடுமையாகத் திட்டியதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்திருக்கிறார். வருங்கால கணவரின் இந்த கொடுமையால் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் தார் மாவட்டத்தில் இச் சம்பவம் நடந்திருக்கிறது.
தார் மாவட்டத்தில் உப்பள்ளி பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா. 25 வயதான இவருக்கும் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிநந்தன் என்பவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 1ஆம் தேதியன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. இதன் பின்னர் இருவரும் போட்டோஷூட் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக கடந்த வாரம் உத்தரகன்னடா மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தண்டேலியில் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது பவித்ராவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார் அபிநந்தன். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பவித்ரா திருமணத்திற்கு முன்னரே இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார். இதெல்லாம் சகஜம் என்பது மாதிரி அபிநந்தன் பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இருவரும் அவர் அவர் வீடு திரும்பி விட்டனர். ஆனாலும் செல்போனில் தொடர்ந்து வாக்குவாதம் நடந்திருக்கிறது.
பவித்ராவிடம் கடுமையாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநந்தன். தினமும் இப்படி இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்திருக்கிறார் பவித்ரா. இதில் மனமுடைந்த அவர் திருமணத்திற்கு முன்னரே கணவன் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறாரே என்ற வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
திருமண நிச்சயதார்த்தம் நடந்த 12 நாளில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்து, அசோக் நகர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் விரைந்து வந்து பவித்ராவின் உடலை மீட்டு கிங்ஸ் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அபிநந்தன் பவித்ராவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பவித்ராவின் பெற்றோர் அபிநந்தன் மீது அளித்த புகாரின் பேரில் அவனை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.