பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் கடந்ததிங்கட்கிழமை நடந்தது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இவர்களில் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரைச் சேர்ந்த நந்தா புருஸ்டி என்ற 102 வயதான முதியவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 75 ஆண்டுகளாக கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுக்கும் சேவையை பாராட்டி நந்தா புருஸ்டிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருது பெறுவதற்காக காலணிகள் அணியாமல் நடந்து சென்று நந்தாபுருஸ்டி விருதினைப் பெற்றார்.
அப்போது, அவர் தனது இரு கைகளையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் தலைக்கு மேல் உயர்த்தி ஆசி வழங்கினார். அவரது ஆசியை ராம்நாத் கோவிந்தும் தலைகுனிந்து கைகளைக் கூப்பி வணங்கியபடி ஏற்றுக் கொண்டார்.
இந்தக் காட்சி காண்போரை நெகிழ வைத்தது. இது தொடர்பான புகைப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.