திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதத்தில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை வந்த மழையால் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை மழை நீர் தேங்கி இருக்கும். ஆனால், இந்த முறை தேங்கி இருந்த மழை நீர், மழை விட்டதும் வடிந்துவிட்டது.
மெட்ரோ பணி நடைபெறும் இடங்களிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கி இருக்கும் நீரை மோட்டார் மூலம் எடுத்து வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக, 560 பம்ப் செட் மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது.
மேலும், மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். மாநகராட்சி சார்பில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும், அதற்கென உள்ள சமையல்கூடத்தில் சமைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.