நிஜ வாழ்க்கை ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் உறுதியளித்தார்.
தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் ஜெய் படத்தை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படம் பார்த்த அனைவரும் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். படத்தில் ராசாக் கண்ணுவிற்கு நடக்கும் அநீதிகளைப் பார்த்து இதயம் கனக்கிறது. படத்தின் கதாபாத்திரத்திற்கு நடக்கும் அவலங்களையே நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாத போது, உண்மையில் ராசாக்கண்ணுவிற்கு நடந்த அநீதிகளைப் பார்த்த பார்வதி அம்மாளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது.
ஜெய் பீம் படத்திற்குப் பிறகு பார்வதி அம்மாளின் கதை பலருக்கு தெரிய வந்துள்ளது. தற்போதும் அவர் சரியான வசதியில்லாமல் வாடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிஜ வாழ்க்கை ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் உறுதியளித்துள்ளார். ”
செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி @jbismi அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.
28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.” என்று தெரிவித்துள்ளார்.