சமையலுக்கு பயன்படுத்தும் மூலிகைகளை தோட்டத்தில் வளர்ப்பதை விட மரப்பெட்டிகளில் வளர்ப்பது என்பது மிகவும் சிறப்பானது. அதிலும் மரப்பெட்டியானது மிகவும் பெரியதாகவும் இருக்கக்கூடாது, மிகவும் சிறியதாகவும் இருக்கக்கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். குறிப்பாக போதிய மண், சூரியவெளிச்சம் மற்றும் முக்கியமாக தண்ணீரை தக்க வைக்குமாறும் இருக்க வேண்டும். குறிப்பாக மரப்பெட்டியில் ஒயின் பெட்டி மிகவும் சிறந்ததாக இருக்கும்.
மரப்பெட்டியில் செடிகளை வளர்க்கும் முன் ஒருசிலவற்றை கவனிக்க வேண்டும். அதில் முதன்மையானது தண்ணீரை தக்க வைக்கும் திறன் உள்ளதா என்று பார்க்க வேண்டும். பின் அதில் கெமிக்கல் எதுவும் இல்லாதவாறு நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அதனை எந்த இடத்தில் வைத்தால், செடிக்கு தேவையான அனைத்தும் கிடைத்து நன்கு வளர்ச்சியடையும் என்று யோசித்து, அந்த இடத்தில் வைக்க வேண்டும்.
இப்போது அப்படி மரப்பெட்டியில் வளர்க்கக்கூடிய சில சமையலில் பயன்படுத்தும் மூலிகைகளையும், எப்படி வளர்க்க வேண்டும் என்பதையும் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை வீட்டில் வளர்த்தால், கடைகளில் காசு கொடுத்து வாங்க அவசியம் இருக்காது.
கொத்தமல்லி
இந்த செடி வைப்பதற்கு, மரப்பெட்டியில் மண்ணை நிரப்பி, 1/4 இன்ச் ஆழத்தில் மல்லி விதையை, சரியான இடைவெளியில் வரிசையாக விதைத்து, தண்ணீர் ஊற்றி, போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
துளசி
சமையலில் பயன்படுத்தும் மூலிகைகளில் ஒன்றான துளசிக்கு சூரிய வெளிச்சமானது அதிகம் தேவைப்படும். எனவே துளசியின் விதைகளை மரப்பெட்டியில் 1/2 இன்ச் ஆழத்தில் விதைத்து, சூரிய வெளிச்சம் கிடைக்கும் சரியான இடத்தில் வைத்து வளர்த்து வரலாம்.
தைம் (Thyme)
தைம் என்னும் மூலிகையும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான். இந்த தைம் செடியின் விதையை 6 இன்ச் இடைவெளிகளுக்கிடையே ஒவ்வொன்றாக விதைத்து, தண்ணீர் ஊற்றி போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
புதினா
பிரியாணியில் அதிகம் பயன்படுத்தும் புதினாவின் வேர் உள்ள தண்டு பகுதியை, மரப்பெட்டியில் உள்ள மண்ணில் 2 இன்ச் ஆழத்தில் துளையிட்டு புதைத்து, போதிய தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தால், நன்கு வளரும்.
பார்ஸ்லி (Parsely)
பார்ஸ்லி செடியை வளர்க்க வேண்டுமெனில், முதலில் அதன் விதையை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அதனை மண் நிரப்பிய மரப்பெட்டியில் 10 இன்ச் இடைவெளியில் விதைத்து வளர்த்தால், சூப், சாலட் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
சேஜ் (Sage)
சேஜ் செடியை மரப்பெட்டியில் வைத்து வளர்க்கும் போது, ஒரு தண்டும் மற்றொரு தண்டுக்கும் 1 அடி இடைவெளி இருக்க வேண்டும். இதனால் அது நன்கு வளரும். இந்த செடியை சிக்கன் ரெசிபிக்களில் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை புல் (Lemon Grass)
இந்த செடியை மரப்பெட்டியில் தான் வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. வேண்டுமெனில் இதனை தோட்டத்தில் 1/4 இன்ச் ஆழத்தில், ஒவ்வொரு விதைக்கும் இடையே 6 இன்ச் இடைவெளி விட்டு, விதைத்தால், தோட்டம் அழகாக இருப்பதோடு, சமையலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லெட்யூஸ் (Lettuce)
பெரும்பாலான ரெசிபிக்களை பயன்படுத்தும் லெட்யூஸ் கீரையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே இத்தகைய சத்துக்கள் நிறைந்த லெட்யூஸ் கீரையை மரப்பெட்டியில் 2 இன்ச் ஆழத்தில் புதைத்து வளர்த்து வரலாம். முக்கியமாக ஒவ்வொரு செடிக்கும் இடையில் 2 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும்.
தில் (Dill)
தில் செடியின் விதையை மரப்பெட்டியில் உள்ள மண்ணில் 1/4 இன்ச் ஆழத்தில் விதைக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு விதைக்கும் 9 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும். இந்த செடியான சாலட் மற்றும் சில ரெசிபிக்களில் அலங்கரிக்க பயன்படுத்தலாம். ஆனால் இதன் சுவை கசப்பாக இருக்கும்.