சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது பூமியின் கருநிழல், சந்திரனின் மீது விழுவதால் சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக சந்திர கிரகணம் பெளர்ணமி தினத்தில் வரும். ஒரு ஆண்டில் இரண்டு அல்லது ஐந்து முறை கூட சந்திர கிரகணம் ஏற்படும். அந்த வகையில் இந்தாண்டு மே 26ஆம் தேதி முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட்டது. இச்சூழலில் நவம்பர் 19ஆம் தேதி இந்தாண்டின் இரண்டாம் கிரகணம் நிகழவுள்ளதூ. ஆனால் இது கொஞ்சம் ஸ்பெஷலான கிரகணம். ஏன்?
ஏனென்றால் இந்த சந்திர கிரகணம் மிக நீண்ட நேரம் நீடிக்கப்போகிறது. இந்த நூற்றாண்டில் இதுபோன்று நீண்ட நேரம் நீடிப்பது இதுவே முதல் முறை. 2001ஆம் ஆண்டிலிருந்து 2100ஆம் ஆண்டு வரையிலான நூற்றாண்டில் நவம்பர் 19 கிரகணத்தைத் தவிர வேறு எந்த சந்திர கிரகணமும் இவ்வளவு நீண்ட நேரத்துக்கு நிகழாது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகணம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கும் எனவும் நாசா கூறியுள்ளது. இதுவும் பகுதிநேர சந்திர கிரகணமே ஏற்படவுள்ளது.
நவம்பர் 18ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 19ஆம் தேதி அதிகாலை வரையில் இந்த கிரகணம் ஏற்படவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்பட உள்ளது. அப்போது தான் சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைக்கும். இந்த வேளையில் சந்திரன் சிவப்பு நிறத்தில் காணப்படும் என்றும் நாசா சொல்லியுள்ளது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் அங்குள்ள நேரங்களுக்கேற்ப பல்வேறு நேரங்களில் கிரகணத்தை காண முடியும். குறிப்பாக வட அமெரிக்க நாடுகளில் இதை தெளிவாக காணலாம் என கூறப்பட்டுள்ளது.