வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் தகுதியின் காரணமாக கனமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னையிலும் கனமழை பெய்யத் தொடங்கிவிட்டது. நேற்று இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு வட மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் என்று அதிக மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.