சென்னையில் காற்று மாசு அதிகரித்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சில நாட்களாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். நேற்று தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் பொதுமக்கள் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
அத்துடன் வான வேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்தன. இதன் மூலம் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் மாசு அளவு 150 என்ற குறியீட்டை எட்டியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை வருமாறு –
சென்னையில் நேற்று வெடித்த பட்டாசால் ஏற்பட்ட காற்று மாசு இன்று காலையிலும் தொடர்கிறது. பெருங்குடியில் காற்றின் தரக் குறியீடு அதிகபட்சமாக 219 ஆக பதிவாகி உள்ளன. சென்னை தேனாம்பேட்டையில் காற்றின் தரக் குறியீடு 181 ஆக பதிவாகி இருக்கிறது. அரும்பாக்கத்தில் 176, வண்டலூரில் 125, போரூரில் 122, மணலியில் 154 என காற்றின் தரக் குறியீடு பதிவாகி உள்ளன.
இது மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆரோக்கியமான காற்று இல்லை. அத்துடன் காற்றில் கலந்திருக்கும் துகள்களின் எண்ணிக்கை அடிப்படையில் காட்சி தரக் குறியீடு என்பது கணக்கிடப்படுகிறது.
0 முதல் 50 வரை இருப்பின் அது ஆரோக்கியமானது என்றும் 51 முதல் 100 வரை இருப்பின் மிதமான காற்றை சுவாசிக்க ஏதுவானது என்றும் 101 முதல் 150 வரை உடல்நல குறைவு ஏற்படும் , சுவாச பிரச்சனை உள்ளவர்கள் சுவாசிக்க காற்று அல்ல என்றும் 151 முதல் 200 ஆரோக்கியமற்ற காற்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தீபாவளி பண்டிகையை இயல்பை விட 20 மடங்கு காற்று மாசடைந்துள்ளது. இது படிப்படியாக குறையும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.