ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பிரதமராக பதவியேற்ற முதல் ஆண்டில் சியாச்சின் சென்று வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
அவ்வகையில் இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிக்கு ராணுவ உடை அணிந்து சென்ற பிரதமர் மோடி, நவ்ஷேரா செக்டாரில் உள்ள வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். பணியின்போது உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார்.
பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் சென்ற பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
பூஞ்ச்-ரஜோரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை 26வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி அப்பகுதிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.