நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் சீமான் தனிக்கொடி எனக்கூறி கொடி ஒன்று ஏற்றி வைத்தார். கொரோனா விதிகளை மீறி அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் தொடர்பாக கிராம அலுவலர் ராஜா அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டுக்கான கொடி என்று கூறி தனிக்கொடி ஒன்றை சேலத்தில் ஏற்றிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் பேரில், சேலம் அம்மாபேட்டை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு கொடி என சீமான் கொடி ஏற்றியதுடன், மொழி வாரியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.