பிரிட்டன் நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயல் மின்ட் நிறுவனம் முதல் முறையாக இந்தியர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மட்டுமே லட்சுமி திருவுருவம் கொண்ட தங்க பார்களை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது
லட்சுமி பார் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்த 20 கிராம் தங்க கட்டியில் கடவுள் லட்சுமியின் திருவுருவம் பதிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தங்க கட்டிகளை ராயல் மின்ட் நிறுவனத்தின் டிசைனரான எம்மா நோபல் என்பவர், கார்டிப் பகுதியில் இருக்கும் ஸ்ரீ சுவாமி நாராயண் திருக்கோவில் உடன் இணைந்து இந்தச் சிறப்பு வாய்ந்த டிசைனை உருவாக்கியுள்ளார்.
இந்த 20 கிராம் கொண்டு லட்சுமி கோல்டு பார் 1,080 பவுண்ட் தொகைக்கு ராயல் மின்ட் விற்பனை செய்ய உள்ளது. பிரிட்டன் நாட்டில் அனைத்து நாட்டவர்களும் இடமுண்டு, அனைவருக்கும் சுதந்திரமாக மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்தியர்களின் முக்கியமான பண்டிகையில் ராயல் மின்ட் பங்குகொள்ளும் விதமாக லட்சுமி பார்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக இந்தியர்கள் தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்கும் வழக்கம் உள்ளது, இது பெருமளவில் மக்கள் மத்தியில் குறைந்து வந்தாலும் தற்போது மீண்டும் பிரபலம் அடைந்து வருகிறது.
இதை உணர்ந்த ராயல் மின்ட் மார்டன், கலாச்சாரம், அழகு ஆகிய மூன்றும் இணைந்தவாறு கடவுள் லட்சுமி திருவுருவம் பதிக்கப்பட்டு உள்ள தங்கக் கட்டிகளைத் தயாரித்து விற்பனையைத் துவங்கியுள்ளது.
மேலும் ராயள் மின்ட் பல திருவுருவங்களைத் தனது தங்க மற்றும் வெள்ளி கட்டிகளில் பதித்துள்ளது. ஆனால் முதல் முறையாக இப்போது தான் கடவுள் லட்சுமியின் திருவுருவத்தைப் பதித்துள்ளது. இது பிரிட்டனில் வசிக்கும் இந்திய மக்களை ஈர்க்கும் விஷயமாக உள்ளது.
இன்று சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.27 சதவீதம் அதிகரித்து 46,079 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, இதேபோல் ரீடைல் சந்தையில் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 43,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை 64,800 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,742 டாலருக்கும், 1,288 பவுண்டுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு அவுன்ஸ் என்றால் 28.3495 கிராம்.