குழந்தைக்கு சளி, இருமல் இருக்கா,பாட்டி வைத்தியம்!

by Column Editor

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே அவர்களுக்கு சளி காய்ச்சல் வராமல் பார்த்துகொள்ள வேண்டும். குறைந்தது அதை போக்கும் மூலிகைகள்

கைக்குழந்தைகள் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என்பதால் அடிக்கடி தொற்றுக்கு ஆளாவார்கள். அப்படி அவர்கள் சந்திக்கும் மிக முக்கியமானது சளி, இருமல் காய்ச்சல் தான். அதிலும் சளி அதிகமாக இருந்தால் மூச்சு விடுதலில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். அதனோடு இருமல் வந்தால் இன்னும் கேட்கவே தேவையில்லை.

பகல் நேரம் இல்லாமல் இரவு நேரங்களில் தூக்கமே இல்லாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். அதிலும் வறட்டு இருமல் பிரச்சனை வந்தால் அது அவ்வளவு எளிதில் அவர்களை விட்டு போகவும் செய்யாது. அந்த நேரத்தில் பாட்டி வைத்தியம் குறித்து தெரிந்துகொள்வதன் மூலம் இந்த பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கலாம். அப்படியான மூலிகைகளை இப்போது பார்க்கலாம்.

​ஆடாதோடை இலை

இதன் இலை,பூ,வேர், பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சித்தமருத்துவத்தில் இதை அதிகமாக பயன்படுத்துவார்கள். சளி முதல் காச நோய் பாதிப்பு வரையான சிகிச்சைக்கு இது பயன்படுத்தப்படுகிறது. இன்றூம் கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கபம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆடாதோடை தான் பயன்படுத்துகிறார்கள்.

சளி, இருமலிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் மிகச்சிறந்த பானங்கள்!

இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ஆடாதோடை இலை பாதி எடுத்து வெதுவெதுப்பான வெந்நீரில் சுத்தம் செய்து இடித்து அதன் சாறை பிழிந்து எடுக்கவும். மூன்று துளி தேனில் மூன்று துளி இந்த சாறை விட்டு நன்றாக குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடவும். இது சளியை முறித்து தீவிரத்தை தடுக்கும். இருமல் மட்டுப்படும். தினமும் மூன்று வேளை கொடுத்தால் போதுமானது.

​கல்யாண முருங்கை இலை

கல்யாண முருங்கை இலையை கொண்டு வந்து வெந்நீரில் அலசி இடித்து அதன் சாறை எடுக்கவும். இதையும் மூன்று துளி தேனோடு மூன்று துளி சாறு கலந்து கொடுத்தால் சளியோடு உள்ளிருக்கும் கிருமியையும் வெளியேற்றும். இருமலுக்கும் நல்லது.

கல்யாண முருங்கை பெண்களின் கருப்பை பிரச்சனைகளை தீர்க்கும் வரம் என்றே சொல்லலாம். இதை தாய்ப்பால் சுரக்க சமைத்து தருவார்கள். குழந்தை வளர்ந்த பிறகும் வயிற்றில் பூச்சிவெளியேற்றவும் சளியை கரைத்து வெளியேற்றவும் உள்ளுக்கு கொடுப்பார்கள். இது குழந்தையின் உடலில் இருக்கும் கபத்தை வெளியேற்ற செய்யும். மூன்று வேளை வரை கொடுக்கலாம்.

​தூதுவளை

தூதுவளை இலையை எடுத்து வந்து ஓடும் நீரில் அலசி எடுக்கவும். வாணலியில் கால் டீஸ்பூனில் நான்கில் ஒருபங்கு நெய் விட்டு தூதுவளை இலை 2 அல்லது 3 போட்டு மிதமான தீயில் வதக்கவும். அதிகம் வதங்க வேண்டாம். பிறகு இதை இடித்து சாறெடுத்து அப்படியே குழந்தையின் நாக்கில் தடவி விட வேண்டும். இது குழந்தையின் நெஞ்சு சளியையும் கரைத்து வெளியேற்றும் குணம் கொண்டவை. தினமும் மூன்று வேளை என இரண்டு நாட்கள் கொடுத்தால் கட்டுப்படும்.

தூதுவளை மூலிகை என்றாலும் இதை கீரையாகத்தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இது உடலில் வாதம், மற்றும் கபத்தினால் உண்டாகும் நோயை போக்கும் வல்லமை கொண்டது. இது ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா நோய்களையும் குணப்படுத்த செய்யும் அளவுக்கு வல்லமை கொண்டவை.

​வல்லாரை சூரணம்

வல்லாரை சூரணம் தயாரிக்கும் முறை குறித்து பார்த்திருக்கிறோம். இந்த வல்லாரை சூரணம் சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடலாம். இது சளியை குறைக்கும். இருமலை கட்டுப்படுத்தும். தினமும் மூன்று வேளை கொடுக்கலாம்.

வல்லாரை நினைவுசக்திக்கான மூலிகை. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியவை. அதே போன்று தூதுவளை போன்று வல்லாரைக்கீரையும் சளிக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இது சளியை போன்று இருமலையும் குணப்படுத்தும்.

தும்பைப்பூ

குழந்தைக்கு சளி அதிகமாக இருந்தால் தும்பைப்பூ 10 எடுத்து அதனோடு நாட்டு மருந்து கடையில் தாளிசபத்திரி கிடைக்கும் அதை வாங்கி கால் டீஸ்பூன் அளவு எடுக்கவும். அதனோடு ஆடா தோடா இலை இரண்டும் சேர்த்து மூன்றையும் இடித்து சுத்தமான வெள்ளைத்துணியில் சாறை வடிகட்டவும்.

இந்த சாறுடன் தேன் கலந்து குழந்தையின் நாக்கில் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை தடவி வந்தால் சளி கட்டுக்குள் வரும். இருமல் குறையும். நெஞ்சு சளி இருந்தாலும் கரையக்கூடும்.

குறிப்பு

பிறந்த குழந்தை முதல் 2 வயது குழந்தை வரை இதை கொடுக்கலாம். துளசி, கற்பூரவல்லி போன்றவை சற்று காரத்தன்மை கொண்டவை என்பதால் அதற்கு இணையான இந்த மூலிகைகளை குழந்தைக்கு கொடுக்கலாம். இவை கொடுத்த பிறகும் சளி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Related Posts

Leave a Comment