மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மும்பை, நாக்பூரிலுள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனடிப்படையில் 12 மணி நேர விசாரணைக்குப் பின் அவர் கைதாகியுள்ளார். இதற்கான ஆரம்பப் புள்ளி மும்பை போலீஸ் ஆணையர் பரம் பிர் சிங்கிடம் இருந்து ஆரம்பமாகியது. இவ்வருட தொடக்கத்தில் பரம்பிர் சிங், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் அனில் தேஷ்முக் மீது புகார் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், “அனில் தேஷ்முக் தன்னை மாதந்தோறும் மும்பையில் உள்ள ஹோட்டல்கள், பார்களில் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர வற்புறுத்துகிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் கொடுத்த பின் பரம்பிர் சுங் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்குப் பின் ஊடகங்களிடம் பரம்பிர் சிங் இதனை தெரிவிக்க விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் தேஷ்முக். வழக்கு மத்திய அரசு முகமையான சிபிஐ வசம் சென்றது. அனில் தேஷ்முக், அவரின் மனைவி, மகன் ரிஷிகேஷ் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பி விசாரித்தது.
இதனை அடிப்பையாகக் கொண்டு அமலாக்க துறையும் வழக்கு பதிந்தது. தொடர்ந்து மும்பை, நாக்பூரில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தியது. இதில் அவருக்குச் சொந்தமான ரூ.4.20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது. மேலும் அவர் ரூ.4.18 கோடி பணத்தை போலியான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதையும் கண்டுபிடித்தது. இதையடுத்து அமலாக்க துறை தேஷ்முக்குக்கு பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் சம்மனை ரத்துசெய்யுமாறு உயர் நீதிமன்றத்தை நாடினார். ரத்துசெய்ய நீதிமன்றம் மறுத்தது. வேறு வழியில்லாமல் நேற்று ஆஜராகினார். 12 மணி நேரம் விசாரணைக்குப் பின் நள்ளிரவில் அனில் தேஷ்முக்கை அமலாக்க துறை கைதுசெய்தது.