முள்ளங்கியின் அளவில்லா மருத்துவ குணங்கள்.!

by Editor News

உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்க வேண்டுமென்பதற்காக நாம் அனைவருமே பலவிதமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் ஏனோ தெரியவில்லை, பலரும் முள்ளங்கியை ஒரு பொருட்டாக கூட கருதுவதில்லை. பளிச்சென்ற நிறமும் மொறுமொறுப்பான தன்மையும் கொண்டுள்ள முள்ளங்கி வெறும் சாலடிற்கு பயன்படுத்தும் காய்கறி என்று நினைக்காதீர்கள். முள்ளங்கியில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல வகையான ஊட்டச்சத்துகளும் இருப்பதால் இந்த காய்கறியை அவசியம் நம்முடைய டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்கு தினமும் தேவைப்படும் வைட்டமின் சி அளவில் 155 சதவிகிதம் வெறும் அரை கப் முள்ளங்கியில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதுமட்டும் தான் முள்ளங்கியில் இருக்கும் நன்மைகள் என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். முள்ளங்கியை நம்முடைய டயட்டில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தே இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

முள்ளங்கியில் அதிகளவு வைட்டமின் சி உள்ளதால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி நமக்கு வரக்கூடிய சளி, இருமல் தொல்லையிலிருந்து இது பாதுகாக்கிறது. இதன் பலன் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் முள்ளங்கியை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தீங்கு நிறைந்த ஃப்ரீ ரேடிகல்ஸ், வீக்கம், வயதான தோற்றம் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் முள்ளங்கி உதவுகிறது.

குறைவான கலோரி:

முள்ளங்கியில் குறைவான கலோரிகளே இருப்பதால், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு சிறந்த ஸ்னாக்ஸாக இது இருக்கும். மேலும் உடல் எடை குறைப்பிற்கு மறைமுகமாக உதவி புரியும் செரிமான இயக்கத்திற்கும் இது நல்லது செய்கிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது:

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலம் கழிப்பதை ஒழுங்குபடுத்துவதிலும் மலச்சிக்கல் வராமல் தடுப்பதிலும் பெரும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி செரிமானத்திற்கு முக்கியமானதாக இருக்கும் பித்த உற்பத்தியை அதிகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது முள்ளங்கி.

இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:

முள்ளங்கியில் அந்தோசைனின் மற்றும் பிற கலவைகள் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது:

முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடெண்ட் சரும பாதிப்புகள் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் வயதான தோற்ற அறிகுறிகளை குறைத்து சருமத்தில் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது.

வைட்டமின் சி அதிகமுள்ளது:

மிகவும் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்டான வைட்டமின் சி முள்ளங்கியில் அதிகம் உள்ளது. இது செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஆரோக்கியமான சருமம் மற்றும் கண்களுக்கும் முள்ளங்கி உதவியாக இருக்கிறது.

Related Posts

Leave a Comment