பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பமாவது மிகவும் அழகான காலகட்டங்களில் ஒன்று. இந்த சமயத்தில் ஒவ்வொரு பெண்ணும் பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்வதால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தாய்க்கும் வயிற்றில் வளரும் கருவிற்கும் என்ன மாதிரியான உணவுகள் பாதிப்ப்பை ஏற்படுத்தும் என்பதை பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டதும் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா அல்லது ஒட்டுன்னிகளை அதிகப்படுத்தி பிரசவ சமயத்தில் சிக்கலை உருவாக்குகிறது.
ஆகவே தங்கள் நலனிற்காகவும் பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனிற்காகவும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித டயட்டை பின்பற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என விரிவான விளக்கங்களை ஆயுர்வேதம் கூறியுள்ளது. அதில் ஒன்றுதான் கர்ப்பிணிப் பெண்கள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது எனக் ஆயுர்வேதம் கூறுகிறது. நவீன அறிவியல் இதை ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இதற்கு பின்னால் உள்ள காரணங்களை விளக்குகிறது ஆயுர்வேதம்.
கர்ப்ப காலத்தை மிகவும் மென்மையான காலகட்டமாக ஆயுர்வேதம் கருதுகிறது. ஏனென்றால் இந்த சமயத்தில் தான் கர்ப்பிணி தாயின் உடல்நிலை அவரை மட்டுமல்ல குழந்தையின் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு உணவுப் பொருளும் விசேஷ தன்மையை கொண்டிருப்பதகவும், இது நம் உடலில் உள்ள ஆற்றல் அல்லது தோஷங்களின் சமநிலையை பாதிக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது. இது பிரசவ சமயத்தில் அதிகமாகலாம். இரவில் மலரும் செடியினமான கத்தரிக்காயில் இருக்கும் சில பண்புகள் பிரசவ சமயத்தில் உகந்ததல்ல. கத்தரிக்காய் சாப்பிட்டால் உடலில் வாத, பித்த தோஷங்கள் அதிகமாகும் என ஆயுர்வேதம் எச்சரிக்கிறது. இதனால் செரிமானம், மெடபாலிஸம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனிலும் சிக்கல் ஏற்படும் என வலியுறுத்துகிறது.
மேலும் கத்தரிக்காயில் சோலனைன், நிகோடின் ஆகிய கலவைகள் குறைந்தளவு இருக்கின்றன. இது பிரசவ சமயத்தில் தீங்கு விளைவிக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த சோலனைன் என்ற இயற்கை பூச்சிக்கொல்லி கத்தரிக்காய், தக்காளி, உருளைகிழங்கு போன்ற காய்கறிகளில் இருப்பதோடு அதிகளவு சாப்பிடும் போது உடலில் நச்சு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அதுமட்டுமின்றி செரிமானப் பிரச்சனைகளையும் அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் வயிற்றில் உள்ள கரு நன்றாக வளர்ச்சியடைய சத்து நிறைந்த எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. கத்தரிக்காயில் வழகத்தை விட அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் செரிமானம் ஆக சிரமமாக இருக்கும். எனினும் ஆயுர்வேத பரிந்துரைகள் ஒவ்வொரு நபர்களின் உடல்நிலையை பொறுத்து மாறுபடும். ஒருவருக்கு சரியாக இருக்கக் கூடியது இன்னொருவருக்கு பொருந்தாமல் போகலாம். ஆகவே கர்ப்பிணி தாய்மார்கள் அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மருத்துவர்களிடம் உங்கள் டயட் மாற்றம் குறித்தோ அல்லது எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தோ உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.