பெண்கள் பலர் சரும பராமரிப்புக்காக நிறைய நேரங்களை செலவிடுகிறார்கள். மிருதுவான, பளபளப்பான சருமத்தை பெற விரும்புகிறார்கள். அந்த வகையில் பாதாம் எண்ணெய் முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
பாதாம் எண்ணெய்யை முகத்திற்கு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சருமத்தை புத்துணர்ச்சியடைய பாதாம் எண்ணெய் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. எனினும் முதல் முறை பயன்படுத்தும்போது சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்று பரிசோதித்து பார்ப்பது நல்லது.
பாதாம் எண்ணெய்யை அடிக்கடி சருமத்தில் பயன்படுத்தி வந்தால் வயதாகும் அறிகுறிகளை தள்ளிப்போட்டு விடலாம். டீன் ஏஜ் வயதில் இருந்தே பாதாம் எண்ணெய்யை பயன்படுத்த தொடங்கினால் வயதாகும் அறிகுறிகள் குறைந்து, இயற்கையாகவே சருமம் பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும்.
அதில் இருக்கும் வைட்டமின் ஈ, சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.
சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையை போக்கி, சருமத்தை மேம்படுத்தி மென்மையாக, மிருதுவாக காட்சியளிக்க வைக்கும் தன்மை பாதாம் எண்ணெய்க்கு உண்டு. சருமத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியை தேடுகிறீர்கள் என்றால், தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் பாதாம் எண்ணெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள்.
தூக்கமின்மை மற்றும் சமச்சீரற்ற உணவு முறை இவை இரண்டும்தான் கருவளையத்திற்கு முக்கிய காரணமாகும். கருவளையம் மற்றும் வீக்கத்தை குறைக்க பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும்.
தூங்க செல்வதற்கு முன்பு சில துளிகள் எண்ணெய்யை கண் பகுதியை சுற்றி தடவவும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நான்கு வாரங்களுக்குள் நல்ல மாற்றத்தை உணரலாம்.
பாதாம் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் தன்மை மற்றும் சரும துளைகளில் சேரும் அழுக்குகளை அகற்றக்கூடியவை. சருமத்தை சுத்தப் படுத்தி, பளிச்சென்று காட்சி யளிக்கவும் வைக்கும். முகப்பரு ஏற்படுவதையும் தடுக்கும். பாதாம் எண்ணெய்யில் ரெட்டினோல் உள்ளது.
இது முகப் பருவை குறைக்கும் தன்மை கொண்டது. எனினும் சருமத்திற்கு ஒத்துக்கொள்கிறதா? என்பதை பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது. முகப்பருவை கட்டுப்படுத்துவதற்கு சாலிசிலிக் கலந்த கிளீன்சரையும் பயன் படுத்தலாம்.
பாதாம் எண்ணெய் மசாஜ் தன்மை இது சருமத்தில் ஊடுருவிச் செல்லக்கூடியது என்பதால் சரும செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். பாதாம் எண்ணெய்யை அடிக்கடி முகத்தில் தடவி மசாஜ் செய்வது சரும நிறத்தை மெருகேற்ற உதவும்.
குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு முகம் மற்றும் உடலில் பாதாம் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்யலாம். பின்பு குளியல் போடலாம். சருமத்தை மேம்படுத்தவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும்.
குளிர்காலத்தில் தோல் அழற்சி, தோல் தடிப்பு அழற்சி மற்றும் வறண்ட சரும பிரச்சினை உள்ளவர்கள் சருமத்தை ஈரப் பதத்துடன் வைத்திருப்பது நல்லது. அவர்களுக்கு பாதாம் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சுரைசர்களில் ஒன்றாக அமைந் திருக்கும்.
பாதாம் எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை பாதுகாக்கக்கூடியது. ஒவ்வாமை, கொசு கடித்தால் ஏற்படும் சொறி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும்.
அத்தகைய பாதிப்புகள் நேர்ந்தால் தினமும் பாதாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.