நமது அன்றாட வாழ்க்கை முறையில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளை எளிமையான உணவு விதிகளை பின்பற்றுவதன் மூலமாகவே சமாளித்து விடலாம் என்கிற அளவுக்கு உணவு நமது ஆரோக்கியத்தில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம் மற்றும் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை தொடர்ச்சியாக கண்காணிப்பதன் மூலமாக நமது ஆரோக்கியத்தை புரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ICMR) இந்தியர்களுக்கு 17 உணவு சார்ந்த வழிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள மக்களை பாதிக்கக்கூடிய ஒரு சில நோய்கள் பற்றிய தகவல்களையும் அந்த புத்தகத்தின் மூலமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த நோய்களில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுவதாக ICMR தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கொரோனரி இதய நோய், ஹைப்பர் டென்ஷன் மற்றும் 80 சதவீத வகை 2 நீரழிவு நோய் ஏற்படுவதை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கலாம் என்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறு வயதில் ஏற்படும் இறப்பை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றுடன் சேர்ந்து குறைவான உடல் செயல்பாடு போன்றவை நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உடற்பருமன் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
ICMR இந்தியர்களுக்காக வெளியிட்ட சமீபத்திய உணவு சார்ந்த வழிமுறைகள்:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய சரிவிகித உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சரிவிகித உணவு.
பெரியவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்.
பாதுகாப்பான மற்றும் தூய்மையான உணவை சாப்பிடுவதை பயிற்சி செய்தல்.
போதுமான அளவு தண்ணீர் பருகுதல்.
உடல் பருமனை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் புரோட்டின் சப்ளிமென்ட்களை தவிர்த்தல்.
உப்பு அளவை கட்டுப்படுத்துதல்.
எண்ணெய் மற்றும் கொழுப்புகளை மிதமான அளவு எடுத்துக் கொள்ளுதல்.
அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்த அளவு தவிர்த்தல்.
இந்த விதிமுறைகள் அனைத்தும் பலமுறை விஞ்ஞான மதிப்பாய்வு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
5-9 வயதிலான சிறுவர்களில் 34 சதவீத அதிக ட்ரைகிளிசரைடு அளவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் சாப்பிடும் சரிவிகித உணவில் தானியங்கள் மூலமாக கிடைக்கும் கலோரிகள் 45 சதவீதத்திற்கு மிகாமலும், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் இரைச்சியில் இருந்து கிடைக்கும் கலோரிகள் 15 சதவீதத்தை மிகாமலும் இருக்க வேண்டும். மீதமுள்ள கலோரிகள் நட்ஸ் வகைகள், காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றிலிருந்து பெறப்பட வேண்டும்.
பருப்பு வகைகள் மற்றும் இறைச்சி விலை உயர்வான உணவுப் பொருட்கள் என்பதால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பெரு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் உட்கொள்வதை தவிர்க்கின்றனர். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை குறைந்த அளவை எடுப்பது வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அது தொடர்பான கோளாறுகளை இளம் வயதிலேயே ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்குகிறது. எனவே இது மாதிரியான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு ஒருவர் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.