பிரித்தானியாவில் பரவிவரும் கக்குவான் இருமல் கிருமி தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான மூன்று மாதங்களில் பதிவானவை என UK Health Security Agency தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில், இவ்வாண்டு 2,700-க்கும் மேற்பட்ட கக்குவான் இருமல் கிருமி வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதன்படி, மார்ச் மாத இறுதி வரை 2,793 வழக்குகள் பதிவாகியுள்ளதாக UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
இது கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும் என குறிப்பிடப்படுகின்றது.
“கக்குவான் இருமல் கிருமி தொற்றானது, அனைத்து வயதினரையும் பாதிக்கும். எனினும், சிறு குழந்தைகளுக்கு இதன் தாக்கம் அதிகம் என UKHSA ஆலோசகர் தொற்றுநோய் நிபுணரான வைத்தியர் காயத்ரி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
தற்காலிக தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும் 1,319 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜனவரியில் 556 தொற்றாளர்களும், பெப்ரவரியில் 918 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கக்குவான் இருமல் கிருமி “100 நாள் இருமல்” என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கர்ப்பிணி தாய்மார்கள் கக்குவான் இருமல் கிருமி தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.