கதைக்களம்
ஹாலிவுட் படங்களில் Stuntman ஆக வேலை செய்யும் கோல்ட் சீவர்ஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியான் காஸ்லிங், இயக்குனாராக பணிபுரியும் ஜோடி மொரேனோ (எமிலி பிளண்ட்) உடன் காதலில் இருக்கிறார்.
ஒரு சண்டைக்காட்சி படமாக்கத்தின்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் நாயகன் கோல்ட், அதன் பின்னர் 18 மாதங்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டு வருகிறார். ஆனால், அவரது காதல் முறிவுக்கு வருவதுடன், காதலி எடுக்கும் மெட்டல்ஸ்டோர்ம் படத்தின் ஹீரோ டாம் ரைடர் காணாமல் போகிறார். இதனால் படம் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது.
இப்போது காணாமல் போன டாம் ரைடரை கதாநாயகன் கண்டுபிடித்து தனது காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? அவர் எடுக்கும் முதல் படத்தை முடித்தாரா என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
காமெடி-ஆக்சன் படமாக The Fall Guy-ஐ உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டேவிட் லெய்ட்ச். இவர் டெட்பூல்-2, பாஸ்ட் அண்ட் பியூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா, புல்லட் ட்ரெயின் ஆகிய படங்களை இயக்கியவர். ஜாலியான ஸ்டண்ட்மேன் கதாபாத்திரத்தில் ரியான் காஸ்லிங் கச்சிதமாக நடித்துள்ளார்.
அதேபோல் இயக்குனராக வரும் எமிலி, ஹீரோவாக வரும் ஆரோன் டெய்லர் ஜான்சன் மற்றும் பிற நடிகர்கள் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
டாம் ரைடரை தேடிப்போகும்போது ரியானுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியில் இருந்து படம் வேகமெடுக்கிறது. அதன் பின்னர் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையில் வரும் ஒரு சில ட்விஸ்ட் அருமை. ஸ்டாண்ட் காட்சிகள் படத்தின் வேகத்திற்கு கைகொடுக்கின்றன.
கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ, ஹீரோயின் போடும் ஸ்கெட்ச் பழைய தமிழ் படங்களில் பார்த்து பழகிய விஷயங்கள் தான் என்றாலும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. முக்கியமான ட்விஸ்ட் தெரிந்த பின்னரும் படம் இன்னும் நீள்வது நெளிய வைக்கிறது.
க்ளாப்ஸ்
காமெடி காட்சிகளுடன் விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்
முக்கியமான இடத்தில் வெளியாகும் ட்விஸ்ட் படுவேகமான திரைக்கதை
பல்ப்ஸ்
கிளைமேக்ஸ் நீளமாக செல்வது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை..
மொத்தத்தில் ஜாலியான ஆக்ஷன் திரைப்படத்தை எதிர்பார்த்து போகும் பார்வையாளர்களுக்கு நல்ல ட்ரீட் ஆக வந்துள்ளது இந்த ”The Fall Guy”.
Rating: 3/5