பிரித்தானியாவில், 17 ஆம் நூற்றாண்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் தற்போது கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெற்கு பிரித்தானியாவைச் சேர்ந்த ரொபர்ட் ஃபூக்ஸ் – பெட்டி தம்பதியினர், தமது 400 ஆண்டுகள் பழமையான ஃபார்ம் ஹவுஸ் வீட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்காக வீட்டின் சமயலறையை தோண்டும் பொழுது, ஏதோ ஒரு பொருள் கீழே தட்டுப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதனை எடுத்து உடைத்து பார்த்த ராபர்ட் ஃபூக்ஸ் ஆச்சரியமடைந்துள்ளார்.
காரணம் அதனுள், எலிசபெத் 1, சார்லஸ் 1, பிலிப் மற்றும் மேரி உட்பட்ட பல்வேறு ஆட்சிக்கால தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் என 1000-க்கும் மேற்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.
நாணயங்களை கண்டுபிடித்தவுடன் ஃபூக்ஸ் உடனடியாக அந்நாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள், அந்த கலைப்பொருட்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு, சுத்தம் செய்து அடையாளம் காண அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நாணயங்களின் இன்றைய மதிப்பு 65,000 டொலர் என சொல்லப்படுகின்றது.