கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 13% அதிகரித்துள்ளது. இந்த கடும் விலையேற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய நகைக் கடைகள் தங்களது கிளைகளை அமெரிக்காவில் விரிவுப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து டைம்ஸ் ஆம் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்திய நகைக் கடைகள் தங்களது கிளைகளை அமெரிக்காவில் விரிவுபடுத்துவதாக கூறபட்டுள்ளது.
இந்தியாவின் பல முன்னணி நகைக் கடைகள் தங்களது கிளைகளை அமெரிக்காவில் விரிவுப்படுத்துகின்றன. அதன்படி, கடந்த ஆண்டு டாடா குழுமத்தின் தனிஷ்க் நகைக் கடையின் கிளைகள் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன், ஃபிரிஸ்கோ மற்றும் நியூ ஜெர்சி ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த மார்ச் 2024-ல் சிக்காகோவில் மற்றொரு கிளையையும் தனிஷ்க் துவங்கியுள்ளது.
அமெரிக்காவுக்கு தனிஷ்க் சற்று அறிமுகமில்லாததாக இருந்தாலும், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால் அங்கு கிளைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கல்யாண் ஜூவல்லர்ஸும் இந்த ஆண்டு நியூ ஜெர்சி மற்றும் சிகாகோவில் தனது புதிய கிளைகளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோன்று உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் அமெரிக்காவில் மேலும் 3 கிளைகளைத் திறக்க உள்ளதாகவும் டைம்ஸ் ஆம் இந்தியாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் 138 கிளைகளைக் கொண்டுள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நகைக் கடை, கடந்த ஆண்டு சிகாகோ, நியூ ஜெர்சி, டல்லாஸ் ஆகிய இடங்களில் கடைகளைத் திறந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் மேலும் 6 புதிய கிளைகளைத் திறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.