நாட்டில், வேலைவாய்ப்பை வலுப்படுத்த தங்களிடம் 23 யோசனைகள் இருப்பதாக, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தின்போது, நாடு முழுவதும் வேலையில்லா பிரச்சினையை அதிகளவில் அவதானிக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்துவதே தங்களுடைய முதல் பணி எனவும் இதற்காக தங்களது தேர்தல் அறிக்கையில் 23 யோசனைகளை தாம் முன் வைத்துள்ளதாகவும், அவற்றில் ஒன்றே, புரட்சிகர திட்டம் (தொழிற்பயிற்சிக்கான உரிமை) என அவர் கூறினார்.
மேலும், உத்தர பிரதேசத்திலுள்ள பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த அனைவருக்கும், தொழிற்பயிற்சிக்கான உரிமையை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் வங்கி கணக்கில் ஆண்டொன்றுக்கு வைப்புத்தொகையாக 1 இலட்சம் ரூபாய் செலுத்தப்படும் என தெரிவித்த ராகுல் காந்தி, கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த உரிமையை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வினாத்தாள் கசிவுக்காக கூட தாம் சில சட்டங்களை இயற்றுவோம் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தொடர்ந்து ஒப்பந்த பணி முறையை ஊக்குவித்து வரும் பா.ஜ.க. நிரந்தர பணிகளை வழங்குவது ஒரு சுமை என கருதுவதாகவும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியமை மற்றும் அதானி போன்ற பெரிய கோடீஸ்வரர்களை ஆதரித்தமை போன்ற செயற்பாடுகளினால், பிரதமர் மோடி வேலைவாய்ப்பு உருவாக்குவதில் தவறு செய்து விட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் இன்று நடைபெற்ற, ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கூட இலட்சக்கணக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், இந்த பணியிடங்கள் அனைத்தும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படும் என உறுதியளித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கிய தரவுகளின்படி, 78 துறைகளில் 9 இலட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாகவும், இதில் முக்கியமான துறைகளை பொறுத்தவரை, ரயில் சேவையில் 2.93 இலட்சம் பணியிடங்கள், உள்துறை அமைச்சகத்தில் 1.43 இலட்சம், இராணுவ அமைச்சகத்தில் 2.64 இலட்சம் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாகவும், ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
15 மிகப்பெரிய துறைகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் வெற்றிடமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இருக்கிறதா? என அவர் கேள்வியெழுப்பினார்.
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வரும் பிரதமரின் அலுவலகத்திலேயே, அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் வெற்றிடமாக உள்ளமை ஏன்? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.