ரூ.90 முதல் ரூ.261 விலையிலான மருந்துகளுக்கு 0.00551% விலை உயர்வு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில செய்தி நிறுவனங்கள் மருந்துகளுக்கு 12% விலை உயர்த்தப்படுகிறது என்று தவறான தகவலை வெளியிட்டனர். இதனால் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வருபவர்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் இந்த தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. “புதிய விலை உயர்வு 0.1 பைசாவிற்கும் குறைவாகவே இருக்கும். எனவே மருந்துகளை வாங்குவோர் அச்சப்படத் தேவையில்லை” என விளக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024 ஏப்ரல் முதல் மருந்துகளின் விலை 12% வரை குறிப்பிடத்தக்க உயர்வைக் காணும் என்று சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வால் 500-க்கும் மேற்பட்ட மருந்துகள் பாதிக்கப்படும் என்றும் இந்தச் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய செய்திகள் தவறானவை, தவறாக வழிநடத்துபவை, தீங்கிழைப்பவை.
மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை (டி.பி.சி.ஓ) 2013 விதிகளின்படி, மருந்துகள் அட்டவணைப்படுத்தப்பட்டவை மற்றும் அட்டவணையிடப்படாதவை என வகைப்படுத்தப்படுகின்றன.
மொத்த விலை குறியீட்டு எண் காரணியான (+) 0.00551% அடிப்படையில், 782 மருந்துகளுக்கான தற்போதைய உச்சவரம்பு விலையில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போதுள்ள உச்சவரம்பு விலை 31.03.2025 வரை தொடரும்.