அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15 வரை காவல்!

by Editor News

கடந்த 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து, அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறையின் காவலை நீட்டிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வருகிற ஏப்ரல் 15ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட உள்ளார்.

Related Posts

Leave a Comment