பாரத கண்டத்தில் வாழ்ந்து மறைந்த ஞானியர்களுள் குறிப்பிடத்தக்கவராக புத்தர் விளங்குகிறார். இவரின் போதனைகள் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக சாதகர்களுக்கும் பாமர மக்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. புத்த மதத்தை சார்ந்தவர் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் புத்தரின் போதனைகளை பின்பற்றுகின்றனர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புத்தரின் முக்கியமான 6 போதனைகளை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
முழு மனதோடு ஈடுபட வேண்டும்: எந்த செயலை செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதில் முழு மனதோடு ஈடுபட வேண்டுமென புத்தர் வலியுறுத்துகிறார். நிகழ்காலத்தில் மட்டுமே மனதை நிலை நிறுத்தி, வருவதை ஏற்றுக்கொண்டு வாழ்வது அவசியம் என குறிப்பிடுகிறார். இவ்வாறு வாழ்வதன் மூலம் நம்முடைய எண்ணங்களை நாமே கண்காணிக்கவும், எதிர்காலம் மற்றும் கடந்த காலத்தை எண்ணி கவலைப்படாமல் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ முடியும்.
எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள்:
புத்தரின் போதனைகளுள் இது மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் அனைத்துமே. மாறக் கூடியது. நிரந்தரமானது என எதுமே கிடையாது. அனைவரும் எப்போதும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டுமென அவர் குறிப்பிடுகிறார். இதனை பழகி கொள்வதன் மூலம் எதனிடமும் எவரிடமும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழக முடியும். மேலும் எவரையும் கட்டுபடுத்தாமல் அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவத்தை இது நமக்கு அளிக்கிறது.
இரக்க குணம்:
எப்போதும் ஒருவர் இரக்க குணத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் அன்புடனும் இரக்கத்துடன் பழக வேண்டும். இந்த குணத்தை ஒருவர் கொண்டிருந்தால் மற்றவர்களின் துயரத்தை போக்குவதோடு தாமும் வாழ்வில் எந்த வித கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர முடியும். மேலும் இரக்ககுணம் என்பது ஒரு பாடமாக மட்டுமே இல்லாமல் அது ஒருவரின் வாழ்க்கை முறையாகவே ஒரு கட்டத்தில் மாறிவிடும்.
அகந்தையை துறக்க வேண்டும்:
நான் என்ற அகந்தையை துறப்பது பற்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் தெளிவாக உணர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். நான் என்ற அகந்தை குடிகொள்ளும் போது ஒருவர் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி நினைக்க துவங்கி விடுகிறார்.. இந்த அகந்தையை ஒருவர் துறக்கும் போது, நான் என்ற வேறுபாடு நீங்கி அனைவரும் ஒன்றே என்பதை உணர துவங்குகிறார். அனைவரும் ஒன்று என்பதை ஒருவர் விளங்கி கொண்டால் அதன் பிறகு யாரிடமும் பாரபட்சம் பார்ப்பது என்பது இருக்காது. ஒருவர் அகந்தையை துறப்பதற்கு முதலில் மற்றவர்களின் அங்கீகாரத்திற்கு ஏங்குவதை நிறுத்த வேண்டும். இதை ஒருவர் பழக்கி கொண்டாலே அவரிடம் உள்ள அகந்தை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
பற்றற்று இருக்க வேண்டும்:
ஒரு மனிதர் எதன் மீதும் பற்றற்று இருத்தாலே நிரந்தர ஞானத்திற்கான திறவுகோல் என்பதை புத்தர் மட்டுமின்றி பல்வேறு மகான்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த பற்றற்ற தன்மையை ஒருவர் கை கொண்டுவிட்டால் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலக பந்தங்களிலிருந்து அவர் விடுபடுவார். மேலும் எதன் மீதும் பிடிப்பிலாத காரணத்தினால் உலகின் எந்த விஷயமும் அவரை பாதிக்காது.
உங்கள் இருப்பிற்கான காரணத்தை அறியவேண்டும்:
ஒருவர் தன்னுடைய பிறப்பிற்கான காரணத்தை அறிய முற்படவேண்டும் என புத்தர் தெளிவாக வலியுறுத்துகிறார். ஒரு குறிக்கோளை மனதில் வைத்து வாழும் போது அம்மனிதர் தான் செம்மையடைவதொடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உதவியாகவும் நல்ல வழிகாட்டியாகவும் விளங்குவார். தன்னுடைய இருப்பு தனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்படியான குறிக்கோள்களை ஒருவர் கொண்டிருக்க வேண்டும்.