வெப்பநிலை அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழலில் வெப்பத்தை நாம் உணர தொடங்கி விட்டோம். கோடை காலத்தில் நாம் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். வெப்பத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட போவதில் ஒன்று நமது சருமம். எனவே வழக்கமான சரும பராமரிப்பை பின்பற்றாமல் கோடைகாலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்பு பின்பற்றுவது அவசியமாகிறது.
சூரியனிலிருந்து வெளிப்படும் UVA மற்றும் UVB கதிர்கள் சருமத்தில் முன்கூட்டியே ஏற்படும் வயதான அறிகுறிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், சரும புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. கோடை காலத்தில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதுமே நமது சருமத்தை சூரியனிடம் இருந்து பாதுகாப்பது அவசியம். கோடை காலத்தில் ஆரோக்கியமான சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டிய அவசியம் என்ன?
சருமத்தை பாதிக்கும் ஈரப்பதம் :
வலிமையான சூரிய வெளிச்சம் மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக நமது சருமம் பாதிப்புக்கு ஆளாகிறது. இந்த இரண்டு காரணிகளுமே நமது சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை தீவிரமாக்கலாம். எண்ணெய் உற்பத்தி அதிகமாகும் பொழுது முகப்பரு ஏற்படுவது அதிகமாகும். வியர்வை மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டும் சேர்ந்து சரும துளைகளை அழுக்குடன் அடைத்து விடும். ஆகவே இந்த எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் வியர்வையை சமாளிக்கும் வகையில் உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கம் இருக்க வேண்டும்.
தடை செயல்பாட்டை சூரிய வெளிச்சம் பாதிக்கிறது :
சரும தடையை கோடை காலத்தில் பாதுகாப்பது மிகவும் அவசியம். ஒவ்வாமை பொருட்கள் மற்றும் தூசுகளுக்கு எதிராக செயல்படக்கூடிய தன்மை சருமத்தடைக்கு உண்டு. எனவே போதுமான அளவு நீரேற்றம் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மூலமாக சரும தடையை வலுவாக வைப்பது அவசியம்.
இறந்த சரும செல்கள் சரும துளைகளை அடைக்கலாம் :
சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் சருமத்தின் மேற்பரப்பில் குவியும் பொழுது சரும துளைகள் அடைத்து அதனால் முகப்பரு, சோர்வு மற்றும் சமமற்ற தொனி ஏற்படுகிறது. எனவே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு நீங்கள் வழக்கமான முறையில் எக்ஸ்ஃபோலிஷன் செய்ய வேண்டும்.
நீர்ச்சத்து இழப்பு காரணமாக ஏற்படும் அபாயங்கள் :
கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ச்சத்து இழப்பு காரணமாக நமது சருமத்திற்கும் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகிறது. அதிகப்படியான வெப்பநிலைகள், நீண்ட நேரம் சூரிய கதிர்களுக்கு சருமத்தை வெளிப்படுத்துதல் மற்றும் ஏர் கண்டிஷனிங் போன்றவை சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை இழக்க செய்து, அதனால் நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் சருமத்திற்கு நீரேற்றம் வழங்கக்கூடிய சரியான மாய்சரைசரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
கோடை காலத்தில் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் சீபம் உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த வெப்பம் காரணமாக சரும எரிச்சல், வியர்க்குரு , ரோஸேசியா போன்ற சரும பிரச்சனைகள் உருவாகிறது. எனவே இந்த விளைவுகளை குறைக்கவும், சருமத்தில் ஏற்படும் சிவத்தல் மற்றும் அசௌகரியத்தை போக்கவும் கற்றாழை, வெள்ளரிக்காய் மற்றும் கிரீன் டீ போன்றவை அடங்கிய சரும பராமரிப்பு முறையை பின்பற்றுங்கள்.