வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா அல்லது குறையுமா..?

by Editor News

தமிழர்கள் கொண்டாடும் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் எளிய மக்களுக்கும் கிடைக்கின்ற சத்தான பழமாக இருக்கிறது. பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, கற்பூரவள்ளி என்று வாழைகளில் எண்ணற்ற வெரைட்டிகள் உள்ளன.

ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும், தித்திப்பான சுவையையும் கொண்டிருப்பவை. சாப்பிட்டு முடித்த பிறகு செரிமானத்திற்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை தமிழ் மக்கள் வெகுகாலமாக கடைபிடித்து வருகின்றனர். வாழைப்பழத்தின் சத்துக்கள் ஒருபுறம் இருக்க, இப்போதெல்லாம் உடல் எடை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதால் இதை எடுத்துக் கொள்வதா, வேண்டாமா என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஒரு சார்பு மக்களும், உடல் எடை குறையும் என்று மற்றொரு சார்பு மக்களும் நம்புகின்றனர்.

உடல் எடை குறையுமா அல்லது அதிகரிக்குமா.? உண்மையை சொல்வதென்றால், வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் உடல் எடை அதிகரிக்கவும் செய்யும், அதேசமயம் எடையை குறைக்கவும் முடியும். இரண்டும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறதா. ஆம் வாழைப்பழத்தை நீங்கள் எப்போது எடுத்துக் கொள்கிறீர்கள், எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து இதன் பலன் மாறுபடும்.

வாழைப்பழத்தை மிதமான அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் புரதம் மற்றும் நார்ச்சத்து உணவுகளையும் எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இன்றி இதன் சுவையை நாம் அனுபவிக்கலாம் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன.? சராசரியாக 118 கிராம் அளவு கொண்ட நடுத்தர அளவிலான வாழைப்பழம் ஒன்றில், 15 கலோரிகள் மற்றும் 27 கிராம் மாவுச்சத்து ஆகியவை இருக்கும். இது தவிர நார்ச்சத்து மூன்று கிராம், புரதம் ஒரு கிராம் என்ற அளவில் இருக்கும். கொழுப்பு சத்து இதில் கிடையாது. அதே சமயம் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன.

உடல் எடையை குறைக்க எப்படி உதவுகிறது.? பொதுவாக கலோரி குறைவான உணவுகளில் ஒன்றாக வாழைப்பழம் கருதப்படுவதால், இதனை சாப்பிடும் போது நம் உடலில் கலோரிகளின் அளவு மிகுதியாக அதிகரிப்பதில்லை. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து நமக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் மற்றும் வெகு நேரத்திற்கு பசியை கட்டுப்படுத்தும். வாழைப்பழத்தில் இயற்கையான இனிப்பு சுவை இருப்பதால், நம் உடலின் இனிப்பு தேடலுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது.ஊட்டச்சத்து மிகுந்த வாழைப்பழம் எடுத்துக் கொள்வதால், உடல் எடையை குறைக்கும் காலத்தில் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வாழைப்பழத்தால் உடல் எடை அதிகரிப்பது எப்படி.? வாழைப்பழத்தில் மிகுதியான மாவுச்சத்து இருக்கிறது. மாவுச்சத்து நம் உடலுக்கு துரிதமான ஆற்றலை கொடுக்கக் கூடியவை. இருப்பினும் அளவுக்கு மிகுதியாக வாழைப்பழங்களை சாப்பிடும் போது நம் உடலில் மாவுச்சத்து சேமிக்கப்பட்டு அதன் எதிரொலியாக உடல் எடை அதிகரிக்க தொடங்குகிறது.

Related Posts

Leave a Comment